உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Monday, 30 August 2010

தூக்கத்தை துரத்தும் துயரம்

இன்று யாரைக்கேட்டாலும் மனசு சரி இல்லை,சரியா தூக்கம் வர
வில்லை என்று சொல்வது இயல்பாகிவிட்டது. சிலரை பார்த்தால்
எந்நேரமும் முகத்தை உம்ம்மென்று...கவலையாக வைத்துக்கொண்டு
விட்டத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். என்னவென்று கேட்டால்
குடும்ப கஷ்டம் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், அம்மாவிற்கு
ஆப்ரேஷன்  பண்ணனும் என்று ஏதாவது சொல்வார்கள் (ஆனால்
அதற்கான வழியை தேடமாட்டார்கள்)

இன்னும் சிலர் எல்லா வசதிகளும் இருக்கும் ஆனால் அவர்களுக்கு
உடலில் எதாவது சிறிய நோய் வந்துவிட்டால் கூட உடனே மரணபயம்
வந்துவிடும் இரவெல்லாம் தூங்கமாட்டார்கள். டெண்சனாகவே
இருப்பார்கள்.
இப்படிதான் நான் வேலைபார்க்கும் இடத்தில் ஒரு  நண்பர் இருந்தார்
அவர் ஒரு நாள் "சும்மா இருந்தவன் சொரிந்து கெட்ட  கதையாக!" கம்பெனி கிளினிக்கிற்கு சென்று கொலஸ்ட்ரால் சோதனை செய்துக்
கொண்டார். அந்த சோதனையில் அவருக்கு  HDL என்னும் கொலஸ்ட்ரால்
கொஞ்சம் அதிகமாக இருப்பதாக தெரிந்தது. அதற்கு  டாக்டர் கொஞ்சம்
அசைவ உணவை கட்டுப்படுத்த சொன்னார். அன்றில் இருந்து
அசைவத்தை விட்டுவிட்டார் வெறும் சைவஉணவு மட்டுமே  சாப்பிட்டார். சிலநாள்களுக்கு பின் மீண்டும் கொலஸ்ட்ரால் சோதனை செய்தார். அதில்
நல்ல கொலஸ்ட்ராலும் குறைந்துவிட்டது என்று  சொல்லிவிட்டார்கள்.
அன்று முதல் அவருடைய இரவு தூக்கம் போய்விட்டது. ஏதேதோ எண்ண  தொடங்கிவிட்டார் ஒரு வகையான பயம் அவருக்கு
வந்துவிட்டது. இரேவெல்லாம் தூக்கம் வருவதில்லை என்று
சொல்லுவார்.



ஒரு நாள் திடீர்ரென்று இரவு நெஞ்சிவலிப்பதாக போன் பண்ணுகிறார்.
நண்பர்கள் அவரை   ஹாஸ்பிடலுக்கு கூட்டிசென்று  ECG சோதனை
செய்துபார்த்தால்  எல்லாம் நார்மலாக இருக்கிறது என்று டாக்டர் 
சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை,
அடுத்தநாள் வேறொரு மருத்துவமனைக்கு செல்வோம் என்று
கூப்பிடுகிறார், அதுபோல் இன்னொரு மருத்துவமனைக்கும் சென்று
சோதனைசெய்து   பார்த்தால் எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது
என்று சொல்லுகிறார்கள், அப்பொழுதும் அவர் நம்பிக்கை கொள்ள
வில்லை. மீண்டும் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் கஷ்டப்
படுவதாக கூறுவார். இது போலவே இரண்டு மூன்றுமுறை செய்தார்.
அடுத்து கொஞ்ச நாள்களுக்கு பின் இரவில் தூங்கும்போது திடீர்ரென்று
மூச்சி விட முடியாமல் திணறுவதாக சொல்ல ஆரம்பித்தார்.
ஒருநாள் அதிகமாக மூச்சி திணறுவதாக சொன்னதால் அவரை
ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.ECG  எடுத்தார்கள், இரவு முழுவதும்
அப்ஜர்வேசன் செய்தார்கள். பிறகு ஒன்றும் இல்லை உங்களுக்கு வெறும் 
மனபிரம்மை என்றுசொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
இத்தனைக்கு பிறகும் அவரின் மனசு திருந்துவதாக இல்லை மீண்டும்
பழைய பல்லவியையே பாடினார்.



அடுத்து அவரை ஒரு மனநிலைமருத்துவரிடம் கூட்டி சென்றோம். அந்த 
மருத்துவர் இது வெறும் பயம் தான் என்றார். அவர் அவருக்கு சில
பயிற்சியும், சில மாத்திரைகளையும் கொடுத்து இதை தொடந்து சாப்பிட
சொன்னார். ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால்.
திரும்பியும் ஆரம்பித்துவிட்டார். என்னவென்று கேட்டால் மனநிலை
மருத்துவர் கொடுத்த மாத்திரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்
என்று சொல்லுகிறார். ஏன் என்றால் அது பழக்கமாகிவிடும்என்று
சொல்லுகிறார். இதற்குமேல் இவர் இங்கு  இருந்தால் சரிபட்டுவராது
என்று கொஞ்சநாள் ஊருக்கு போய்வாருங்கள் என்று அனுப்பிவைத்து
விட்டோம்.

ஊரில் குடும்பத்துடன் இருந்துவிட்டு கொஞ்சம் பரவாயில்லை என்று.
திரும்பவும்  விடுமுறை முடிந்துவந்தார். பிறகும் அவர் செயலில் மாற்றம்
இல்லை.(அவர் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர்
OIL and GAS செக்டாரில் சம்பளத்தில் குறை இருக்காது என்பது
அனைவருக்கும் தெரிந்ததே) அனைத்தையும் விட்டுவிட்டு அடுத்த
ஒரேவாரத்தில் வேலையை ரிசைன் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இத்தனைக்கும் அவர்   பத்துவருட கல்ப் அனுபவம் உள்ளவர்.
இப்பொழுதும் ஊரில் இருக்கிறார்.

இதேபோல் இன்னொரு நண்பர் அவருக்கு இந்தளவு பாதிப்பு இல்லை
என்றாலும் அவரும் இதே மரண பயம் உள்ளவர் தான். இவருக்கு
சாதரணமாக  பிரஷ்சர் சோதனை செய்யப்போனாலும் இவருடைய பயத்தால்  நார்மலாக இருந்தவரின் பிரஷ்சர் அதிகமாகிவிடும். இப்படி
தான் ஒரு நாள் வருடம் ஒரு முறை செய்யப்படும் உடல் சோதனையில்
இவருக்கு பிரஷ்சர் அதிகமாக இருந்ததால் இவரை மருத்துவர் அட்மிட்
ஆக சொல்லிவிட்டார். பிறகு இவருடைய கதையை மருத்துவரிடம்
சொன்னபிறகு புரிந்து கொண்டு அவரை ரிலக்ஸ் ஆகுமாறு செய்து
பிறகு பிரஷ்சர் சோதனை செய்யப்பட்டதும் நார்மலாக இருந்தது.
இதுபோன்றவர்கள் எல்லாம் ஏன் தங்கள்  மனசை கட்டு படுத்துவதில்லை
என்று தெரியவில்லை. இவர்களுக்கு நமக்கு தெரிந்த மனசை கட்டுபடுத்தும் முறைகளை சொன்னாலும் அவர்கள் அதை ஒழுங்காக பின்பற்றுவதில்லை.
யோகா,தியானம் போன்றவைகளையும் சரியாக தொடர்ந்து செய்வது
கிடையாது. இதுவே இவர்களுடைய இத்தனை பாதிப்பிற்கு காரணம். 

இதுபோன்றவர்களை இந்த பாதிப்பில் இருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த
சில யோசனைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கூறலாம் என்று
எண்ணுகிறேன்.
 

Sunday, 22 August 2010

குர்ஆனின் பாகத்தை எளிதில் தேட வாருங்கள் !!!

"மேலும் குர்ஆனை தெளிவாகவும், நிறுத்தி நிறுத்தியும்  ஓதுவீராக!"
                                                                                                                 அல்குர்ஆன்-73:2

ரமலான் மாதம் குர்ஆன் இறங்கிய மாதம் எனவே இந்த மாதத்தில்
முஸ்லிம்கள் குர்ஆனை  அதிகம் அதிகம் ஓதுவது வழக்கம்.சிலர்
இம்மாதத்தில் ஒருமுறை குர்ஆனை ஓதிமுடிப்பார்கள்,சிலர்
இருமுறை,இன்னும் சிலர் பலமுறை என்று இம்மாதத்தில்
குர்ஆனை ஒதிவருவார்கள்.(நானெல்லாம் இதில் முதல்வகை  
முட்டிமோதி ஒரு முறைதான் ) அவர்களுக்காக இந்த சிறிய பதிவு.
இதில் எப்படி குர்ஆனின் 30 பாகங்களின் பக்கத்தையும் எளிதில்
கண்டுபிடிப்பது என்பதை பற்றி பார்போம்.(இது மதினா அல்-முனவ்வரா
வெளியீடு Standard size குர்ஆனிற்கு மட்டுமே பொருந்தும்)


மதினா முனவ்வரா வெளியீடு குர்ஆன்

நன்றாக கவனியுங்கள்.

திருக்குர் ஆனில் மொத்தம் 30 பாகம்(ஜுஷ்ஷுக்கள்) உள்ளது.

முதல் உதாரணம்.

உங்களுக்கு 5வது  பாகத்தை குர்ஆனில் எடுக்க வேண்டும் என்றால்.
5வது பாகம் என்பதால் இல் ஒன்றை கழிக்கவும் 5-1=4 கிடைக்கும்
அத்துடன் 2ஐ பெருக்கவும் 4x2=8 வரும்.அந்த 8ற்கு பின் 2
சேர்த்துக்கொள்ளுங்கள் 82.இப்பொழுது நீங்கள் குர்ஆனில் 82வது
பக்கத்தை எடுத்தால் அதில் உங்களுக்கு 5வது பாகம் கிடைக்கும்.

இரண்டாவது உதாரணம்

நமக்கு 10வது பாகத்திற்கு போகவேண்டும் என்றால்.10-1=9,பிறகு
அத்துடன் 2ஐ பெருக்க வேண்டும் 9x2=18,அடுத்து அத்துடன் 2
சேர்க்க வேண்டும் 182.இப்போது நீங்கள் குர்ஆனில் 182ஆம் பக்கத்திற்கு போனால் உங்களுக்கு 10வது பாகம் கிடைக்கும்.

இது போல் உங்களுக்கு தேவையான பாகத்தை இந்த கணக்கு படி
கண்டுபிடித்து சென்றால் நீங்கள் தேடும் பாகத்தின் பக்கத்தை எளிதில்  
காணலாம்.

(குறிப்பு :-கிடைக்கும் ரிசல்ட்இல்  உள்ள பக்கத்தில் ஆரம்பத்திலோ அல்லது 
முடிவிலோ நமக்கு தேவையான பாகத்தின் தொடக்கத்தை காணலாம்)  
 


Tuesday, 17 August 2010

வளைகுடா நாடுகளும் ரமலானும்

அரபு நாடுகளை பொறுத்தவரை ரமலான் என்பது ஒரு மகிழ்ச்சி தரும்
மாதமாக இருக்கிறது.அது அந்த நாட்டவர்களானாலும்  சரி,
வெளிநாட்டவர்களுக்கும் சரி......ரமலான் பிறந்து விட்டால் மகிழ்ச்சிதான்.

அம்மாதத்தில்  நகரங்கள் எல்லாம் அழகு படுத்த படுகிறது,கடைகளில்
எல்லாம் விலை சலுகை (Offers)அறிவிக்கப்படுகிறது.செல்பேசிகள் கட்டண
சலுகை கொடுக்கப்படுகிறது. வேலை நேரங்கள் எட்டு  மணி நேரத்தில்
இருந்து ஆறு மணி  நேரமாக குறைக்கப்படுகிறது.நோன்பு திறப்பதற்காக
பல நிறுவங்கள் உணவு பலகாரங்களை தங்களிடம் வேலை
செய்பவர்களுக்கு விநியோகிக்கின்றன

       ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்

மேலும் இம்மாதத்தில் இங்கு இரவு பகலாகவும்,பகல் இரவாகவும்
காட்சியளிக்கிறது. அது எப்படி என்றால் காலை நேரங்களில்
கடைகள் பெரும்பாலும் திறப்பதில்லை நோன்பு திறந்ததிலிருந்து
துவங்கி இரவில் அதிகமான நேரம் வரை திறந்துவைக்கின்றனர்.
அந்நேரங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக
காட்சியளிக்கின்றனர்.
                                                                           இப்தார் கூடாரம்
இதையெல்லாம் விட சிறப்பம்சம் என்னவேன்ன்றால் ரமலான்
வந்துவிட்டால் அந்நாட்டு அரசோ அல்லது சில தனியார்நிறுவங்களோ
ஒன்றிணைத்து நோன்பு திறப்பதற்காக கூடாரம் (Ifthaar tent)
அமைகின்றனர்.அதில் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரிச்சம்பழம்,மற்ற
பழவகைகள்.குளிர்பானங்கள்,தண்ணீர் பாட்டில்கள் போன்றவை
விநியோகிக்கப்படுகின்றது மேலும் அரபு உணவுகளும் (கப்ஷா,மஜ்பூஸ்)
பெரிய பெரிய தாம்பூலத்தில்வைத்து வியோகிக்கப்படுகிறது.
                                                                                     இப்தார்
                    கப்ஸா எனும் அரேபியா உணவு   
ஒவ்வொரு தாம்பூலத்திலும்  ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருந்து உணவு
அறுந்தவைக்கப்படுகின்றனர்.இவ்வாறு அது தனியார் நிறுவன கூடாரமாக
இருந்தால் ஒவ்வொரு அரபு குடும்பம்களும் அவர்களுடைய தகுதிக்கேற்ப
ஒருநாளோ இரண்டு நாள்களோ செலவிடுகின்றனர்.

ஈத் தொழுகை
ஈத் எனும் பெருநாள் வந்துவிட்டால் நகரங்கள் அனைத்தும் லைட்டுகளால்
அலங்கரிக்கபடுகின்றது,நகரமே கோலாகாலப்படுகிறது.மேலும்
ஈத்திற்காக 5 அல்லது 6  நாள்கள் விடுமுறை விடப்பட்டுகின்றது.
இந்த விடுமுறையில்தான் என்னைபோன்றவர்கள் நண்பர்களையோ,
உறவினர்களையோ காணபடையெடுப்பது உண்டு  எனவே அந்நேரம்
டேக்சியும் பஸ்சும் கிடைக்காமல் மக்கள் அல்லோலப்படுவதுண்டு.
இவ்வாறு வளைகுடாவின் ரமலான் மாதத்தை பற்றி சொல்லிக்கொண்டே
போகலாம்..............

என் அனுபவத்துளிகள்........

நான் சவுதியில் இருந்தபோது ஒரு நாள் கம்பெனி வேலையாக
அல்கோபர் நகரத்திற்கு நானும் என்னுடன் சேர்ந்த சில நண்பர்களும்
காரில் சென்று கொண்டுருந்தோம்.நோன்பு திறக்கும் நேரம் மிக நெருங்கி விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை வண்டியை நிறுத்தி
கடைகளுக்கும் செல்லவும் வழி இல்லை கடைகள் எல்லாம் மூடி
இருக்கின்றன,பின்பு வண்டி ஒரு சிக்னலில் நின்றது என்ன ஒரு
ஆச்சரியம் திடீர்ரென்று தோன்றிய ஒரு அரபி மற்றும் அவருடைய 
மகன்களும் ரெடியாக கையில் வைத்திருந்த நோன்பு திறப்பதற்கான
தண்ணீர்,பேரிச்சம்பழம்,இன்னும் கேக்குவகைகள் எல்லாவற்றையும்
ஒவ்வொரு கவரிலும் வைத்து அந்த சிக்னலில் நிற்கும் அனைத்து
வண்டிகளுக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.நல்லவேளை அவை
எங்களுக்கும் கிடைத்தது.எனவே எந்த கஷ்டம் இன்றி நோன்பு திறக்க
முடிந்தது.இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களின்  கொடைபண்பு விருந்தோம்பல்
பண்பு விளங்கியது.
 _____________________________________________________________
ரமலான் வந்துவிட்டால் அரபு சிறுவர்களின் சேட்டைகள் தாங்கமுடியாது.
இரவு தொழுகையுக்கு வந்து மஸ்ஜித் உள்ளேயே கோஷ்டி மோதல்கள்
நடத்துவார்கள் தொழுகையில் நிற்கும் மற்ற சிறுவர்களை சீண்டிவிட்டு
ஓடிவிடுவார்கள் இதுபோன்ற குறும்பு செயல்களை செய்து
கொண்டுருப்பார்கள்.இன்னும் சில சிறுவர்கள் சாலையில்தனியாக
நின்றுகொண்டுருக்கும் கார்களை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 
அப்படிதான் யான்புவில் என் உறவினருடைய நண்பர் ஒருவர்
தன்னுடைய காரை  இரவு தனது வீட்டிற்குமுன் நிறுத்திவிட்டு
சென்றிரிக்கிறார் .மறுநாள் காலையில் வேலைக்கு செல்வதற்காக காரை எடுக்க வீட்டிலிருந்து வெளியில்வந்து பார்த்தல் காரை காணவில்லை
என்ன செய்வது என்று புரியாமல் எனது உறவினருக்கு போன்செய்து
அவருடன் அவருடைய காரில் ஒவ்வொரு சாலையாக
தேடிச்சென்றுகிறார்கள்.இறுதியாக அந்தக்கார் ஒரு பாலைவன
வனாந்தாரத்தில் அனாதையாக பெட்ரோல் இல்லாமல் கிடந்திருக்கிறது(அதாவது அச்சிறுவர்கள் பெட்ரோல் இருக்கும் வரை வண்டியை ஓட்டிவிட்டு பெட்ரோல் முடிந்ததும் அங்கேயே விட்டுவிட்டு
சென்றிருக்கிறார்கள்) பிறகு வண்டிக்கு பெட்ரோல் ஊற்றி
எடுத்துவந்துள்ளனர்.அன்றுமுதல் அந்த காரின் உரிமையாளர் 
 காரின் ஷ்டீரிங்கிற்கும் பூட்டுபோட ஆரம்பித்துவிட்டார்.
________________________________________________________
ஒரு ரமலானில் கத்தரில் உள்ள அல்கோர் எனும் இடத்தில்
நோன்புதிறப்பதற்காக நண்பர்களுடன் இப்தார் கூடாரத்திற்கு   
சென்றிருந்தோம்.அன்று விநியோகிக்கப்படும் உணவு கொஞ்சம்
பற்றாக்குறை ஆனதாக ஒரு புரளியானது,அதை அறிந்த சில நோன்பு
திறக்க வந்திருந்த  வங்கதேசக்காரர்கள்(Bangali)தங்களுக்கு சாப்பாடு  கிடைக்காமல்
போய்விடும் என்று எண்ணி அங்கு விநியோகிக்கப்பட்டுகொண்டிருந்த
சாப்பாடு தாம்புலத்தை தங்களுக்கு வைக்க வேண்டி அத்தாம்பூலத்தை
பிடித்து தொங்கிய காட்சி சரியான நகைசுவையானது. 


குறிப்பு:-சம்பவம் படிப்பதற்காக சுவையேற்றப்பட்டுள்ளது.                   

Sunday, 15 August 2010

சுதந்திர காற்று

ஒரு 70,80 வருடங்கள் பின்னோக்கி  சென்றுபாருங்கள் !!!

அந்தோ!!!!என்ன நடக்கிறது,தினம் தினம் வீதியில் கொடூரங்கள்........
வெள்ளையனே வெளியேறு  என்ற கோஷங்களுக்கு இடையில் ஆங்கிலேய
காவலர்களால் தாக்கப்பட்ட தியாகிகளின் மரண  ஓலங்கள்.சிறை எங்கும்
தியாகிகளின் கால்தடங்கள்.ஐயகோ!!வெள்ளையனுக்கு அடிமைகளாக நாம்.
                                                                                                                  உப்பு சத்யாகிரகம்
                                                                   முதல் சுதந்திரக்கொடி ஏற்றப்படுகிறது
முதல் சுதந்திர விழா
 மாவீரன் திப்புசுல்தானின் வீரதீர போராட்டத்தை பொறுக்கமுடியாத 
ஆங்கிலேயர் அவனை துக்கிலிட்டுவிட்டு  அவன் குடும்பம் முழுவதும் நாடு நாடுகடத்தபடுகிறார்கள் ,கட்டபொம்மனின் வெள்ளையன் எதிர்ப்பால் 
தூக்கில் இடப்படுகிறான் ,கிலபாத் இயக்கத்தவர்களும்  தூக்கில் இடப்படுகிறார்கள் ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது,கேரளா
 மாப்பிள்ளைமார்களுக்கு   நாடுகடத்தல் மற்றும் தூக்கில் இடப்படுகிறார்கள்,
வேலூர் சிப்பாய் கலகத்தவர்களும்   தூக்கில் இடப்படுகிறார்கள்,உப்பு
சத்தியாகிரகம் நடத்தியவர்கள் மீது தாக்குதல்  நடத்தபடுகிறது,
வெள்ளையனுக்கு எதிராக கப்பல்கட்டிய வா.வு.சி.க்கு செக்கிழுக்கும்
தண்டனை கொடுக்கப்படுகிறது,இந்திய தேசிய ராணுவத்தை நடத்திய
நேதாஜி நாடுகடத்தபடுகிறார்,இப்படி  நீண்டுக்கொண்டு இருக்கிறது இந்த பட்டியல்..............

இதுபோல் எத்தனையோ தியாகத்திற்கு பின்...........எத்தனையோ கொடுமைகளுக்கு பின்........எத்தனையோ அவலங்களுக்கு பின்.........
சுதந்திரம் என்ற காற்றை நம்மை நுகரசெய்து விட்டு சென்றார்கள்
நம் தியாகிகள்.

70,80ஆண்டுகளுக்கு  பின் இன்று நாம் மகிழ்ச்சியாக உலாவருகிறோம் .
இன்று நமக்கு வாழ்வதற்கு  சுதந்திரம்,பேசுவதற்கு சுதந்திரம்,எழுத
சுதந்திரம் என்று இத்தனை சுதந்திரங்கள்.இத்தனையும் கொண்டு
நம் சுதந்திர நாட்டை காக்கின்றோமா?

இலஞ்சங்கள்,அரசியல்வாதிகளின் கொள்ளைகள்,வரி எய்ப்புக்கள்,
கொலைகள்,கொள்ளைகள் என நாம் பெற்ற சுதந்திரத்தை பேணமறந்தும்,
நம் முன்னோர்களின் தியாகத்தை மறந்தும் வாழ்ந்து வருகிறோம்.இந்த
நிலை  தொடருமானால் நம் வல்லரசு கனவு என்பது நம் பத்து
தலைமுறைக்கு பின்னாலும் கனவாகவேதான் தொடரும் என்பதில் 
சிறிதும் மாற்றம் இல்லை.எனவே இந்த 64 வது சுதந்திர தினத்தை
முன்னிட்டு நாம் நமக்குள்ளே சபதம் எடுத்துக்கொள்வோம்.

"என் தாய்நாட்டின் நலத்திற்காக உழைப்பேன்,
என் நாட்டு மக்கள் அனைவரையும் உயர்வு தாழ்வு பார்க்காமல் சமமாக
நடத்துவேன்,
இலஞ்ச லாவண்யத்தின் பக்கம் செல்லமாட்டேன்,
கொலை,கொள்ளை போன்ற நாச வேலைகளை செய்யமாட்டேன்"

                            தியாகத்தின் மீது வளர்ந்த சுதந்திரத்தை பேணி காப்போம்.

உங்கள் அனைவருக்கும் இனிய 64 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

                

Wednesday, 11 August 2010

ருசிக்க தெரிந்தவர்

இரண்டாவது பதிப்பின்  மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.......

என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் பட்டாளம்  கொஞ்சம் அதிகம்(ஹலோ........தப்பா நினைக்காதிக்க நான் என் அக்கா,அண்ணன்,தங்கச்சி,
மாமா,மச்சி எல்லோரின் குடும்பத்தையும் சேர்த்து சொல்றேன்)
அந்த குட்டி வாண்டுகளின் சேட்டைகளை பார்த்தால் ஐ...யோ!!!!!!!!!!சொல்லிமாலாது.அது நமக்கு கொஞ்சம் தொந்தரவை கொடுத்தாலும்
அவைகள் ரசிக்கும் படியாகவும்  இருக்கும். அப்படியான குறும்பு சேட்டைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

   அதில் முதலாவது  ஒரு நான்கு வயது வாண்டுவின் லீலை,இவரை
கொஞ்சம் கவனகுறைவா விட்டுவிட்டா போதும் உடனே பஸ்
பின்னாடியே ஓடுறது, இல்லன்னா கல்லதூக்கி அடிக்கிறது இது போன்ற
கைவண்ணம் கட்டுவது  இவரின் வாடிக்கை எனவே இவனின் தொந்தரவு
தாங்கமுடியாமல் இவனின் அம்மா வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு சாயங்காலம் ஆனால் அக்கம் பக்கத்து  வீட்டாருடன் பேசி அரட்டை
அடிக்க சென்று விடுவது வழக்கம்.இதுபோல் வீட்டில் அடைக்கபட்ட ஒரு
நாள் சாயங்காலம் இவர்(அதான்  நம்ம  கதாநாயகன்) ஒரு நாற்காலியை
இழுத்து அலமாரி அடுத்து போட்டு அதன்மேல் ஏறி அலமாரியில் உள்ள
சாமான்களை உருட்ட ஆரம்பித்திருக்கிறார் அது கொஞ்சம் போரடிக்கவே.
அப்புறம் அங்கு இருந்த யூகலிப்டஸ் தைலத்தின் பாட்டிலை திறந்து பதம் பார்த்துவிட்டார் (அதான் குடித்து விட்டார்)அது அவனுக்கு வாயும்,
வயுரும் எறியவே சத்தமிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.உடனே ஓடி
வந்த அவனுடைய தாயாரும் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும்
அங்கு திறந்து கிடந்த பாட்டில்லை பார்த்து விட்டு பையன் பதம்
பார்த்ததை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு ஓடினார்கள்.
பின்பு இறைவனின் உதவியால் ஆபத்தில் இருந்து டாக்டர் காப்பாற்றினார்.
அதன் பிறகு எல்லாம் சரி ஆனா பின் தன் தாயாரிடம் கேட்டான்
பாருங்க...... ஒரு சந்தேகம்.

  "உம்மா நான் அலமாரி மேலே இருந்த எல்லாத்தையும்(அவன் குறிப்பிடும் 
எல்லாத்தையும் என்பது ink,ஷாம்பூ,எண்ணை) குடிச்சி பார்த்தம்..மா!
ஆனா இதுமட்டும் ரெம்ப உரப்பா(காரம்மா)இருந்திச்சி ஏன்....ம்மா?"

அப்புறம் தான் தெருஞ்சிது  இவருக்கு தினசரி தொழிலே இதுதான் என்று.
அடுத்து என்னா அவரு வீட்டு காவலில் இருந்து விடுதலை பெற்றார்.

மீண்டும் வாண்டுகளின் ராஜ்ஜியம் தொடரும்.............................

குறிப்பு:-சம்பவம் படிப்பதற்காக சுவை ஏற்றப்பட்டுள்ளது   
                            

Monday, 9 August 2010

கடை திறப்புவிழா

      கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கும்அனைவரையும் வருக வருக என
வரவேற்கிறேன்.இனிப்பு  எடுத்துக்குங்க..........  


         நண்பர்களே!பல  கடைகளுக்கு  கஸ்டமரா மட்டுமே  இருந்து வந்த
எனக்கு திடீர்னு ஏன் நம்ம சொந்தகடை திறக்ககூடாதுன்னு  ஒரு எண்ணம்
வந்துச்சி.,இருந்தாலும் நம்ம மண்டைல அவ்வளவு சரக்கு ஒன்னும்
இல்லியே எதைகாட்டி கஸ்டமரை வளச்சிபோட முடுயுமுண்டு ஒரே
குழப்ப்ப்பமா இருந்துச்சி.அப்புறம் ஒரு வகையா மனசை தேத்திட்டு
கடையை விரிப்போமுண்டு துணிஞ்சி முதலை(பயப்படாதீங்க இந்த
முதலை கடிக்காது)போட்டுட்டேன்.ஏக இறைவன்தான் இதைஅபிவிருத்தி
ஆக்கி வைக்க வேண்டுமுண்டு பிரார்த்திக்கிறேன்.

     அப்புறம் என்னோட சொந்தஊரு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்குற
காயல்பட்டினம் என்கிற(குக்கிராமம்முண்டு........ சொல்லுவேன்னு 
நினைக்காதிங்க அது) ஒரு நகராட்சி.எங்கஊர்காரனுக அதிகமான ஆள்கள்
பழைய இரும்புதொழிலை ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்ததாலதான்
 பழைய இரும்பு கடைகளுக்கு காயலாங்கடை...... காயலாங்கடைன்னு
பெயர்வந்ததா சொல்லப்படுது(ஆதாரம் எல்லாம்கேக்கக்கூடாது) .
அதனாலதான் என்னுடைய வலைபதிவிற்கு  காயலாங்கடைன்னு
பெயர் வச்சிட்டேன்.


       அதுக்காக நீங்க, எல்லாமே பழைய சரக்குதான் இங்க  இருக்குன்னு
 தப்பா எடை போட்டுறாதிங்க (ஏன்னா எடை போடுறது எங்க வேலை)
ஏதோ என்னோட தகுதிக்கு ஏண்ட அளவு சரக்கை போட்டு வியாபாரம்  தொடங்க இருக்கிறேன்.அதுக்கு இங்க வந்திக்கிற  எல்லோரும் உங்கள்
ஆதரவை தரும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(....ஹா அரசியல்வாதி அளவுக்கு போயுருச்சே!) அப்படியே
 பின்னுட்டள்ள ஒரு சொடுக்கு சொடுக்கி  கமாண்ட்ஸ் போட்டுட்டு
போகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(இறைவன் நாடினால்) விரைவில்
நல்ல நல்ல சரக்கை இந்த கடையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்..... 
      
                                   
Related Posts with Thumbnails