உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Tuesday, 23 November 2010

"வரலாற்று பொக்கிஷம்" புத்தக வெளியீட்டுவிழா.


காயல்பட்டணத்தில் நவம்பர் 18 (ஹிஜ்ரி 1431,துல்ஹாஜ் பிறை11) கே.டி.எம்.தெரு சீதக்காதி நூலக வளாகத்தில் வைத்து வரலாற்று பொக்கிஷம் என்ற தனி பிரதி நூல் வெளிடப்பட்டது.இதன் தொகுப்பு ஆசிரியர் ஏ.எல்.எஸ்.என்ற லெப்பை சாஹிப் அவர்கள்.இந்நூலை ஏ.எல்.எஸ்.அவர்கள் மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு செய்திகளையும் ,அரிய புகைப்படங்களையும் சேகரித்து நூலாக வெளியிட்டுள்ளார்.
மூஸா ஹாஜி அவர்கள் நூலை வெளியிட S.T.கமால் அவர்கள் பெற்றுகொள்கிறார்கள்.அருகில் நூல் ஆசிரியர் ஏ.எல்.எஸ்.அவர்கள்.
இந்நூலின் ஆசிரியர் ஏ.எல்.எஸ். அவர்கள் E.அஹமது அவர்களுக்கு நூலில் உள்ள செய்திகளையும் புகைபடங்களையும் விளக்குகிறார்.(இடமிருந்து.S.T.கமால்,E.அஹ்மத்,S.H.நியாஸ்,மற்றும் A.L.S)
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி 
ஜப்பான் முஹம்மத் முகைதீன் பொன்னாடை போர்த்த A.L.S.அவர்கள்  பெற்றுகொள்கிறார்.  

இந்த வெளியீட்டு விழாவிற்கு தாயிம்பள்ளியுடைய செயலாளர் எம்.அஹமது அவர்கள் தலைமை வகித்தார்கள்,பள்ளியின் முன்னால் தலைவர் எஸ்.மூசா ஹாஜி அவர்கள் இந்நூலை வெளியிட,எஸ்.டி.கமால் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.வாழ்த்துரை A.R.தாஹா ஹாஜி வழங்கினார்கள்,நிகழ்ச்சி தொகுப்பு சீதக்காதி நூலகத்தின் பொருளாளர் S.H.நியாஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சி இறுதியில் ஜப்பான் முஹம்மது முகைதீன் அவர்கள் இந்நூலின் ஆசிரியர் ஏ.எல்.எஸ்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள்.இறுதியில் நன்றியுரையுடன் இவ் எளிய நிகழ்ச்சி நிறையுற்றது.

இறைவன் நாடினால் விரைவில் இந்நூலின் விமர்சனம் வெளியிடப்படும். 


Friday, 19 November 2010

ஒரு சர்வதேச மாநாடு



மனிதர்களில் உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,உயர்குலத்தோர்,இழிகுலத்தோர்,
உயர் ஜாதி,கீழ் ஜாதி என்று கற்பித்து பிரிந்தும்,பிழந்து,பிழவுபட்டுக்
கிடக்கும் இவ்வுலகில்,மனிதா!! உன்னில் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் 
என்ற வித்தியாசம் ஒன்றும் இல்லை நீங்கள் அனைவரும் ஒரு தாய் 
மக்கள் என்றுசொன்னது மட்டும் இல்லாமல் செயல்படுத்தியும் காட்டிக்
கொண்டு இருக்கும் மாநாடு;வெள்ளையர் கறுப்பரை விடவோ,கறுப்பர்   
வெள்ளையரை விடவோ உயர்ந்தவர் இல்லை என்று முழங்கிய 
மாநாடு;ஏழை,பணக்காரர் வித்தியாசம் பார்க்காத மாநாடு,அது தான் 
சத்தமே இல்லாமல் நடந்த சர்வதேச மாநாடான புனித ஹஜ்.


மனிதர்களே!! நீங்கள் உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.அவன் 
எத்தகையவன் என்றால்,அவன் தான் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து 
படைத்தான்,அதிலிருந்து அதற்கு துணையைப் படைத்தான்.இன்னும் அவ்
விருவரிலிருந்து அநேக ஆண்களையும்,பெண்களையும்   பரவச்செய்தான்...
அல்-குர்ஆன்- 4 : 1

"மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே!உங்கள் 
தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர,அரபிகள் அஜமி 
(அரபியல்லாதார்) களை விட உயர்ந்தோருமல்ல.அதுபோல் அஜமிகள் 
அரபிகளைவிட உயர்ந்தோரு மல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்த
வரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோரு
மல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்
கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ 
எனது காலில் போட்டு மிதிக்கிறேன்.)" 

முஹம்மது  நபி அவர்களின் இறுதி ஹஜ் சொற்பொழிவு.
நூல்- புஹாரி,முஸ்லிம்.


எத்தனையோ மதங்களும்,இசங்களும், மனிதர்களில் ஏற்றத் தாழ்வு
களில்லை என்று சொல்லத்தான் செய்கின்றன ஆனால் அவை செயல் 
படுத்திக்காட்டுவதில் தோற்று விட்டன.ஆனால் சொல்லிலும் 
செயலிலும் மேலோங்கி நிற்கும் இந்த இஸ்லாம் அச்சகோதரத்துவத்தை 
செயல் படுத்திக்காட்டவே ஹஜ் என்னும் சர்வதேச மாநாட்டை 
முஸ்லிம்களுக்கு ஐந்தாவது கடமையாக்கியது.  

இந்த மாநாட்டில்  மேற்கத்திய வெள்ளையரும்,ஆப்ரிக்க கருப்பரும்,
மங்கோலிய முகம்கொண்ட நாட்டவர்களும்,அழகில் உயர்ந்த 
எகிப்தியர்களும் இன்னும் பல இனத்தவர்களும்,செல்வசீமான்களும்,
ஏழை எளியவர்களும் எந்தவித பாகுபாடுமில்லாமல் தைக்கப்படாத 
இரண்டு வெண்ணிற  உடைகளை அணிந்து 
"லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்,லெப்பைக் 
லாஷரீக்கலக லெப்பைக்,இன்னல்ஹம்த வன்னிஃமத 
லகவல்முல்க் லாஷரிக்கலக்"
( நான் உன்னிடத்தில் ஆஜராகிவிட்டேன் ! யா அல்லாஹ் ! நான் ஆஜராகி 
விட்டேன்  .நான் வந்துவிட்டேன்.உனக்கு இணை துணை கிடையாது; நான்
(உன்னிடம்) வந்து விட்டேன்.யால்லாஹ்! உண்மையாக அனைத்து 
அருட்பாக்கியமும்,புகழும் உனக்கே உரியவை.அனைத்துலகின் அதிபதியும் 
நீயே ! உனக்கு இணை துணை யாருமில்லை.) என்று முழங்கி
 இறைவனை கண்ணியப்படுத்துகிறார்கள்.

மாநாட்டு காட்சிகள் சில...... 





















































புகைப்பட உதவி :- அரப் நியூஸ் 


Monday, 15 November 2010

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

என் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தியாகத் திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி
பொங்கிவழிய இறைவனை வேண்டுகிறேன்..............   


இந்தப்பதிப்பு வெறும் வாழ்த்துகளுடன் முடிவுறாமல்,இப்பெருநாளை பற்றிய 
சில நினைவுட்டல்களும் உங்கள் பார்வைக்கு.........
  • பெருநாள் தொழகையை திறந்த வெளிதிடல்களில் நிறைவேற்றுங்கள்.
  • ஹஜ் பெருநாள் தொழுகைக்கு சென்றுவிட்டு வந்தபின்பே நீங்கள் காலை 
       உணவை உண்ணுங்கள்.
      • பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு ஒரு வழியாகவும்,தொழுகை முடிந்து வரும்போது      மற்றொரு வழியாகவும் வாருங்கள்.
        • பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்பே நீங்கள் உங்கள் குர்பானி 
              பிராணியை இறைவனுக்காக பலியிடுங்கள்.
            • பெருநாளில்  உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் 
                         அனைவருக்கும் வாழ்த்துக்களையும்,இனிப்புக்களையும் பரிமாறிக் 
                         கொள்ளுங்கள். 
                  • பெருநாள் தக்பீரை துல்ஹஜ் 9 இரவு மக்ரிபிருக்கு பின் துவங்கி துல்ஹஜ் 12 அஸர் தொழுகை வரை ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் சொல்லுங்கள்.
                  • தக்பீர் இப்படி சொல்லுங்கள் அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர், லாயிலாஹா இல்லல்லாஹு அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர் வலிள்ளஹில்ஹம்து.

                     

                  Sunday, 14 November 2010

                  உறவினர்களுடன் ஒட்டிவாழுங்கள், வெட்டிவாழாதீர்கள்

                         இன்றைய பரபரப்பான உலகில் உறவினர்கள் என்று சொன்னாலே 
                  நம்மவர்கள் தலையில் காலடிக்க ஓடுகிறார்கள்.ஏதோ நாம் உண்டு நம் 
                  மனைவி,குழந்தைகள் உண்டு என்று வாழவிரும்புகிறார்கள்.ஏன் தங்கள் 
                  பெற்றோர்,அண்ணன் மற்றும் தங்கைகளை கூட உறவினர்களாக மதிப்ப
                  தில்லை."என் அண்ணனுடன் எனக்கு பல வருடங்களாக பேச்சுவார்த்தை 
                  இல்லை, என் தங்கையுடன்  பத்து வருடங்களாக ஒட்டும் இல்லை உறவும் 
                  இல்லை என்று பெருமையாகவே சொல்லிகொள்பவர்களும் சிலர் உண்டு".
                  இறை நம்பிக்கை உள்ளவர்களும் இதில் விதிவிலக்கல்ல.

                  ஆனால் நமது பதிப்பின் நோக்கம் இதை சுட்டி காட்டுவது அல்ல. இப்படி
                  உறவுகளை வெட்டிவாழ்பவர்களில் பெரும்பான்மையினர் அவர்கள் வெட்டி
                  வாழும் உறவுகளுடன் ஒட்டி வாழ விரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
                  என்பதை தான்.ஆனால் அதற்கு தடையாக அவர்களுடைய ஈகோ என்னும்
                  தன்முனைப்பு (அகங்காரம்) இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இவரை
                  கேட்டால் நான் ஏன் முதலில் பேசவேண்டும் அவர்தானே முதலில் 
                  என்னிடம் சண்டை இட்டுக்கொண்டார் எனவே அவர் என்னிடம் முதலில் 
                  பேசட்டும் என்று இவரும்.அவரை கேட்டால் நான் ஊரில் முக்கிய 
                  அந்தஸ்தில் உள்ளவன் நான் எப்படி முதலில் இறங்கிப்போய் அவனிடம் 
                  பேசமுடியும் என்று அவரும், ஆக  இருவரும் ஒருவருக்கொருவர் 
                  அவர்களின் மனதில் உள்ள ஈகோவுடன் இன்னும் பல வருடங்களாக
                  முகத்தை திருப்பிக்கொண்டு வாழ்வார்கள்.இதில் உள்ள வேடிக்கை 
                  என்னவென்றால் இவர்கள் பேசாமல் இருந்த காலத்தை விடபேச 
                  நினைத்தும் ஈகோவினால் பேசாமல் இருக்கும் கால அளவு தான் மிக  
                  அதிகமாக இருக்கும்.


                  எனக்கு தெரிந்த சில சகோதரர்கள் இப்படி தான் பல வருடங்களாக ஒட்டும்
                  இல்லை உறவும் இல்லை என்று இருந்தவர்கள் ஒரு சில மூன்றாவது நபர்
                  தலையிட்டு சமாதனப்படுத்தியதால் இன்று ஒட்டி உறவாடிவருகின்றனர்.
                  இதில் இன்னும் சிலரோ எத்தனை பேர்தான் சமாதானத்திற்கு வந்து இவர்
                  களை ஒட்டவைக்க நினைத்தாலும் வெட்டியேதான் நிற்போம் என்று
                  கொள்கையாக இருக்கிறார்கள்.இப்படிபட்ட பூனைக்கு மணிகட்டுவது யார்
                  என்று ஏங்கி இருக்கும் வேளையில் தான்....................
                      
                  இதே இலக்கை கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஆலிம் (அறிஞர்)[இவர் அல்
                  ஜாமிஉல் அஷ்ஹர் என்னும் ஜூம்மா பள்ளியினுடைய கத்தீப் (சொற்பொழி
                  வாளர்)] களம் இறங்கினார்.அவர் சொற்பொழிவு ஆற்றும் வெள்ளிக்கிழமை
                  தொழுகை மேடையில் தொடர்ச்சியாக இரண்டு வார சொற்பொழிவில்
                  (சொற்பொழிவை செவியேற்க இங்கு கிளிக் செய்யவும் ஜூம்மா1, ஜும்மா2 )
                  அவர் குர்ஆனிலிருந்தும்,நபிமொழிகளிலிருந்தும், இது போன்ற செயல்கள் 
                  தவறு என்று ஆணித்தரமான ஆதாரங்களை கொட்டி மேற்படி ஆட்களின் 
                  இறைஅச்சத்தில் படிந்த தூசியை தட்டிவிட்டார்.அவர் நிகழ்த்திய உரையை 
                  கேட்ட உறவை முறித்து வாழும் சகோதரர்கள் ஒவ்வொருவரும் கத்தீப் 
                  (சொற்பொழிவாளர்) நம்குடும்ப பிரச்சனையை எப்படியோ தெரிந்து
                  கொண்டுதான் பேசுகிறார் என்று எண்ணும் அளவு பலவிதமாக அலசினார்.
                  அவ்வுரையை கேட்ட எனக்கும் என் நண்பர்களுக்கும் திருப்திகிடைத்தது.
                  முதல் வார சொற்பொழிவுக்கு பின்னரே எத்தனையோ சகோதரர்கள் தங்கள் 
                  விட்டுப்போன உறவுகளை புதுப்பித்துக்கொண்டார்கள் என்று பரவலாக 
                  செய்திவந்தது (அல்ஹம்துலில்லாஹ்) இறைவனுக்கே எல்லாபுகழும்.
                  இரண்டாவது வாரசொற்பொழிவிலும் தொடர்ந்தது அவர் பிரச்சாரம்.இதற்கு 
                  பின்னரும் பல சகோதரர்கள் தங்கள் விட்டுப்போன உறவை புதுப்பித்துக்
                  கொண்டனர்.இது நடந்து சில நாட்களுக்கு பின்னர் அந்த அறிஞரை 
                  சந்தித்து உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது.அப்பொழுது அந்த சொற்பொழிவு
                  களுக்கு பின்னர் ஊர் நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அதற்கு 
                  அவர் அந்த சொற்பொழிவுக்கு பின்னர் அவருக்கு வந்த தொலைபேசிகளை 
                  பற்றி சொன்னார்.எத்தனையோ சகோதரர்கள் தொடர்பு கொண்டு நானும் 
                  என் சகோதரரும் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் 
                  இருந்தோம் உங்கள் உரைக்கு பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்து 
                  கொண்டோம் அதற்காக உங்களுக்கு நன்றி என்றும்,நானும் என்
                  சம்மந்தியும் பல வருடங்களாக ஒட்டுமில்லை உறவுமில்லை என்று
                  இருந்தோம் ஆனால் உங்கள் உரையை கேட்டுவிட்டு நாங்கள் போட்டி
                  போட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி இணைந்துவிட்டோம்.
                  அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம் என்றும்,இன்னும்
                  சில குடும்பங்கள் இணைந்து ஒருவர் மற்றவர்களுக்கு விருந்து உபச்சாரம்
                  எல்லாம் செய்து கொண்டதாகவும் சொல்லி நன்றி தெரிவித்துக்
                  கொண்டுள்ளதாகவும், இப்படியாக பல தொலைபேசிகள் வந்ததாக 
                  சொன்னார் அது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.          
                         
                  சிந்திக்க சில நபிமொழிகள் :- 

                  தமது வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் 
                  யாருக்கு மகிழ்ச்சி  அளிக்குமோ அவர் தமது உறவை பேணி வாழட்டும்.
                  என்று முஹம்மது நபி(ஸல்) சொன்னார்கள்.
                  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
                  நூல்: புகாரி.

                  உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும்.ஆகவே "அதனுடன் யார் ஒட்டி 
                  வாழ்கின்றாரோ அவருடன் நானும் ஒட்டி உறவு பாராட்டுவேன்.அதை யார் 
                  வெட்டிக் கொள்கிறாரோ அவருடன் நானும் வெட்டிக் கொள்வேன்" (என்று 
                  உறவைப் படைத்த போது இறைவன் சொன்னான்).என்று முஹம்மது நபி 
                  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                  அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)
                  நூல்: புகாரி.       

                  அல்லாஹ்விடம் உங்களில் சிறந்தவர் யார் என்றால் உங்களுக்குள் முதலில் 
                  ஸலாம் சொல்பவர்(அவர் உங்களை விட்டு முகத்தை திருப்பிக்கொண்டு 
                  சென்றாலும்)
                  நூல்: திர்மிதி. 

                  குறிப்பு:- இதை படிக்கும் நீங்களும் இது போன்ற உறவை முறித்துக்கொண்டு 
                  ஆனால் சேர்ந்துக் கொள்வதற்கு தயாராக இருக்கும் உங்களின் உறவினர்கள் 
                  மற்றும் நண்பர் களையும் உங்களின் தலைஈட்டினால்  சேர்த்துவைத்து 
                  இறைவனிடம் நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். 

                  -----------------------------------------------------------------------------------------------------------
                  வருந்துகிறேன்.... 
                  மடிக்கணினியில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறின் காரணமாக சில 
                  மாதங்களாக பதிவு ஒன்றும் போடாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.
                  -----------------------------------------------------------------------------------------------------------

                  Saturday, 2 October 2010

                  சுதந்திரம் தேடிக்கொடுத்த தேச பிதா

                   நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 142 ஆம் பிறந்த நாளான இன்று, 
                  அவரை பற்றிய பதிப்பாக, எங்கள் ஊரில் காந்திஜி அவர்களின் நினைவாக
                  அமைக்கப்பட்டுள்ள தோரணவளைவை பற்றியும், அதில்எழுதப்பட்டுள்ள 
                  காந்திஜியின் பொன்மொழிகளையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 
                   

                  மாகத்மா  காந்தி  நினைவு தோரனவளைவு

                  ஒரு குடியரசு தினத்தன்று இரவு காந்திஜி  நினைவு தோரணவாயில் 
                  
                  நீங்கள் படத்தில் காணும் இந்த தோரணவளைவானது.மகாத்மாகாந்தியின்
                  நினைவாக காயல்பட்டணத்தில் உள்ள எல்.கே.எஸ். குடும்பத்தினரால் 
                  கட்டப்பட்டு ,  23-07-1956 இல் அன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சராக 
                  இருந்த திரு.K.காமராஜர் அவர்களால் திறந்து   வைக்கப்பட்டது. அந்த 
                  தோரனவாயிலின் மேல் காந்திஜி அவர்களின் பொன்மொழிகள் 
                  பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளை   கீழே காணலாம்.

                  கடவுள் ஒருவனே என்று நான் நம்புகிறேன், அதனால் மனித சமூகம்
                  முழுவதுமே ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன். 

                  நான் தெய்வ நம்பிக்கை கொண்டவன். பிரார்த்தனை பண்ணுகிறவன்.
                  என்னைத் துண்டு துண்டாக வெட்டினாலும் கடவுள் இல்லை என்று
                  சொல்லாமல் கடவுள் இருக்கிறான் என்று சொல்லத்தக்க பலத்தை
                  எனக்கு அவன் கொடுப்பான்.

                  கிராமம் அழிந்தால் இந்தியா அழியும்.........

                  சத்தியத்தின் வழியில் தைரிய முள்ளவர்கள் செல்ல முடியும்,
                  கோழைகள் செல்ல முடியாது.

                  துவேஷம் ஒழித்தவனுக்கு ஆயுதமே தேவை இல்லை.

                  உலகில் அபின் உற்பத்தியைப்போல், ஆயுத உற்பத்தியையும் 
                  கட்டுப்படுத்த வேண்டும். உலகின் துன்பத்திற்கு அபினை விட 
                  ஆயுதமே பெருங்காரணமாக இருந்திருக்கிறது.

                  உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும் விட ஆத்ம சக்தியே பலம்
                  மிகுந்தது.அதை அழிக்கவோ அல்லது எதிர்த்து நிற்கவோ 
                  எவராலும் முடியாது.

                  தாய்நாடே நமது இலச்சியம் என்று வாழ்ந்தால்தான் நீங்களும் 
                  வாழ்ந்தவர்கலாவீர்கள்.

                  நோயால் சாகிரவர்களை விட பயத்தால் சாகிரவர்களின் 
                  எண்ணிக்கைஅதிகம். ஆதலின் பயத்தை விட்டொழியுங்கள்.

                  எளியவர்களை ஒடுக்கும் பாவத்தில் முழ்கியிருக்குமட்டும் நாம்
                  விலங்குகளை விட மேலானவர்களல்ல.

                  உழைப்பின்றி உன்கின்றவர்களை திருடர்கலேன்ருதான் அழைக்க
                  வேண்டும்.

                  எந்தவொரு வாலிபன் தன் திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க
                  வேண்டுமென்று நிபந்தனை ஏற்படுத்துகிறானோ அவன், தான் கற்ற
                  கல்விக்கும், தன் நாட்டிற்குகும் இழுக்கு ஏற்படுத்துவதுடன், 
                  பெண்மைக்கு அவமானஞ் செய்தவனாகிறான்.

                  என் எதிரியைப் பாம்பு கடித்தால் அவனுடைய உயிரைக் காக்க அந்த
                  விஷத்தை நான் உறுஞ்சி எடுப்பேன்.

                  கடவுள் நம்முடைய கற்பனா சிருஷ்டி என்று சிலர் கருதுகிறார்கள்.
                  அவர்கள் கருத்து உண்மையென்றால் அப்புறம் உலகத்தில் 
                  எதுவுமே உண்மையன்று.

                  அதிகமாய் துன்பம் அனுபவிக்கக் கூடியவன் அதிகமாய்ச் சேவை 
                  செய்யக்கூடும்.

                  ஒருதலைச் சார்பு உடையவனும், கோபம் உள்ளவனும் 
                  உண்மையை ஒருநாளும் அறிய முடியாது.

                  நல்லவர்களும்,பரிசுத்தமானவர்களும் அடங்கிய கூட்டத்தையே 
                  நீங்கள் நாட வேண்டும். 

                  செய்திகள் உதவி - காஹிர் ஷேக்.  
                  காந்திஜீயின் குழந்தை பருவம்


                  
                   சிறுவர் பருவம்    

                  வாலிப பருவம்
                  
                  தடியுடன் காந்திஜி


                  ராட்டு சுற்றும் காந்திஜி
                    




                  Related Posts with Thumbnails