உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக........

Tuesday, 28 September 2010

ஒரு இலவச சுற்றுபயணம்

 ஒரு பழமையான கடலோர நகரம் என்ற பதிப்பின் மூலம் நாம் 
காயல்பட்டனத்தின் ஆரம்ப வரலாறை பார்த்தோம்.இந்த பதிப்பில் 
உங்களுக்கு நான் காயல்பட்டனத்தை சுற்றி காண்பிக்கிறேன்.

இவ்வூர் பெரும்பான்மையாக இஸ்லாமிய மக்களை கொண்டது. 
மேலும் இவ்வூரை பற்றிய ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், 
இங்கு காவல் நிலையம் கிடையாது, திரையரங்குகள் கிடையாது, 
டாஸ்மாக்குகள் கிடையாது.      

காயல்பட்டணம் உங்களை அன்போடு வரவேற்கிறது

 
மகாத்மா காந்தி நினைவு வளைவு
இது தான் காயல்பட்டனத்தின் நுழைவுவாயில். இது காந்தியின்
நினைவாக கட்டப்பட்டு ஒரு சுதந்திரதினத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இன்னும் இதைப்பற்றிய அதிகமான் தகவலை சேகரித்துக்கொண்டு
இருக்கிறேன். (இறைவன் நாடினால் விரைவில் பதியப்படும்)  

ஐக்கிய விளையாட்டு சங்கம்

இந்த ஐக்கிய விளையாட்டு சங்கம் 1955 ஆம் ஆண்டு முதல்
ஆரம்பமாகி நடந்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு முதல் இங்கு
தேசியஅளவில் "மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பை"
கால்பந்து விளையாட்டு வருடா வருடம் சிறப்பாக நடந்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் டென்னிஸ்,பேட்மிடேன்  போன்ற
விளையாட்டு மைதானமும் இதனுள் உள்ளது.

பேருந்து நிலையம்


காயல் மெடிக்கல் டிரஸ்ட்

இந்த காயல் மெடிக்கல் டிரஸ்ட் என்ற மருத்துவமனையானது 1990 ஆம்
ஆண்டு துவங்கப்பட்டு நல்ல முறையில் நடந்து வருகிறது.மேலும் இங்கு
ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சைகளும்,கட்டண சலுகைகளும்
செய்யப்பட்டு வருகிறது.

கடற்கரை பூங்கா
கடற்கரை

இந்த எழில்மிகு கடற்கரை எங்கள் ஊருக்கு இறைவன் கொடுத்த
அருட்கொடையாகும். மாலை நேரங்களில் கடற்கரை மணலில் அமர்ந்து
கொண்டு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ பேசுவதற்கும்,அரட்டை
அடிப்பதற்கும். தனிமையில் அமர்ந்து சிந்திப்பதற்கும் மன மகிழ்ச்சியான
இடமாக விளங்கிவருகிறது. இந்த பறந்து விரிந்த கடற்கரை மணல்பரப்பு
மெரினாவை நினைவுபடுத்துவதாக இருக்கும். இதை நான் சொல்ல
வில்லை, ஒருமுறை ஊருக்கு வந்திருந்த முன்னால் முதல் அமைச்சர்
திரு.ராஜாஜி அவர்கள் இந்த கடற்கரையை பார்த்துவிட்டு சென்னை
மெரினாவிற்கு நிகராக இதுவும் இயற்கை அழகுடன் திகழ்வதாக
வர்ணித்துள்ளார்.

நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் MLA நிதி மூலமாக இங்கு பூங்கா
கட்டப்பட்டு இந்த கடற்கரையை  சுற்றுல்லா கடற்கரையாக அரசு
மாற்றியது. அன்றுமுதல் இங்கு மற்ற ஊர்மக்களின் வருகையும் அதிக
மாகியது. மக்கள் அதிகமானதால் அவர்களின் கவனக்குறைவால் சில
இடங்கள் கூளமும், குப்பையுமாக   காட்சியளிக்கிறது. இந்த பிரச்சனை
யிளிருந்து கடற்கரையை பாதுகாப்பதற்காக சில மதங்களுக்கு முன்
ஊரில் உள்ள சிலர் ஒன்றிணைந்து காயல்பட்டனம் கடற்கரை
பயனாளிகள் சங்கம் (kayalpatanam beach user association) என்ற ஒரு சங்க
த்தை நிருவி கடற்கரையின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பாதுகாப்
பான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.       

பெரிய  குத்பா பள்ளி

இது ஊரில் கட்டப்பட்ட இரண்டாவது பள்ளியாகும், இது கி.பி 843 ஆம்
ஆண்டு காயல்படனத்திற்கு இரண்டாம் கட்டமாக குடியேறிய எகிப்தி
யர்களால்   கட்டப்பட்டு, கி.பி 1336 ஆம் ஆண்டு இங்கு மூன்றாம் கட்டமாக
குடியேறிய அரேபியர்களால்  புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.

நீங்கள் கீழ்காணும் பள்ளிகள் காயல்பட்டனத்து மற்ற பள்ளிகளாகும்.
இப்புகைபடத்தில் இல்லாத பள்ளிகளும் உள்ளது. முடிந்தால் அவை
களையும்   விரைவில் காணலாம்.

அப்பா பள்ளி
கொடிமர சிறு நைனார்   பள்ளி

    புது  பள்ளி

    மஹ்லரா    
  1.  
அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி         
 
ஆறாம் பள்ளி
  
அஹமது நைனா பள்ளி

அருஸியா பள்ளி

இரட்டை குளத்து பள்ளி

கே.எம். டி. பள்ளி

காட்டும் மொஹுதூம் பள்ளி


கோமான் மொட்டையார் பள்ளி


குருவித்துறை பள்ளி


மரைக்கார் பள்ளி
 


செய்ஹுஹுசைன் பள்ளி


பிலால்  பள்ளி



தாயும் பள்ளி
இவைகள் மிக சில இடங்களே, இன்னும் அதிகமான இடங்கள்
காண்பதற்கு உள்ளது. மேலும் இங்குள்ள கலாச்சாரங்களில் சில
வித்தியாசமானதாகவும், வியப்பானதாகவும் காணலாம்.

உதாரணத்திற்கு: தெருக்களில் பெண்கள் செல்வதற்காக ஒவ்வொரு
வீட்டிற்கும் இடையிலும்  முடுக்குகள் (சந்துக்கள்) அமைத்திருக்கும்.
அடுத்து திருமணமான ஆண் பெண்வீட்டில் வாழும் ஒரு கலாச்சாரமும்
இங்குள்ளது. இவைகளும் விரைவில் பதியப்படும்.






Tuesday, 21 September 2010

ஒரு பழமையான கடலோர நகரம்

காயல்பட்டனம் என்ற கடற்கரை நகரமானது வங்காள விரிகுடா  கடலின்
தெற்கு கரையில் உள்ளது. இந்நகரம் மிக பழமைவாய்ந்த வரலாற்றை
கொண்டது  .

இவ்வூர் தமிழ்நாட்டின் தெற்கே தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர்
எனும் ஊருக்கு 8 கி.மீ. தெற்கிலும், தூத்துக்குடிக்கு 32 கி.மீ. தொலைவிலும் கடலோரமாக அமைந்துள்ளது.இந்நகரம் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம்
ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்
பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்டைகால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை,பெத்திர மாணி
க்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் இன்றைய காயல்பட்டனம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இன்னும் இது கபடபுரம் 
என்ற பெயரில் இரண்டாம் தமிழ்சங்கத்தின் தலைநகரமாகவும்
விளங்கியுள்ளது.
காயல்படனத்தில் கிடைக்கப்பெற்ற மிக பழமையான மண்பாண்டங்கள்  
இந்த நகரத்தின் வரலாற்றில் இங்குள்ள கடற்கரை மிக முக்கிய இடத்தை
பெறுகிறது. எந்த அளவு என்றால் இந்நகரம் உருவாக காரணமே !! இக்
கடக்கரைதான். எனவே இந்நகர மக்களின் வாழ்க்கையோடு இக்கடற்
கரை பின்னிப்பினைந்துக்கொண்டிருக்கிறது.

முற்காலத்தில் இந்நகரில் ஒரு பெரிய துறைமுகம் இருந்துவந்துள்ளது.
மேலும் முத்துகுளிப்பிலும்  இந்நகரம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறை
முகத்திற்கு அரேபியா,கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவிலிருந்தும் வியா
பார போக்குவரத்துக்கள் இருந்துள்ளது. அதற்கான பற்பலசான்றுகள் இங்கு
காணகிடைகின்றன. அரேபியாவில் இஸ்லாம் உதிப்பதற்கு முன்பே
(முஹம்மது நபி தமது இஸ்லாமிய பிரச்சாரத்தை துவங்குவதற்கு
முன்பே) இந்நகர துறைமுகத்துடன் அரேபியர்கள்  வியாபார தொடர்பு
வைத்திருந்துள்ளனர். அரேபியாவிலிருந்து குதிரைகள்   மற்றும் பல
பொருள்கள் இறக்குமதிசெய்யப்பட்டு.இங்கிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்துள்ளது (அதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் இவ்வூரில்
பரிமார் தெரு என்று   ஒரு தெரு உள்ளது, பரி என்றால் குதிரை, மார்
என்றால் மாற்றம் அல்லது வியாபாரம்).
 

இப்னு பதுதா
மார்கோபோலோ

ரசிதுதீன்










 

பயணர்களான மார்கோ போலோ, இப்னு பதுதா, அப்துல்லா வசைப்,
ரஷிதுதீன் (பெர்சிய வரலாறு ஆசிரியர் )  போன்றவர்கள் இந்நகருக்கு
வருகைதந்துள்ளனர். இவர்களுடைய குறிப்பேட்டில் இந்நகரை பற்றிய
செய்திகளை குறிப்பிட்டுள்ளனர்.    

மார்கோபோலோ வருகையின்போது காயல்படன வரைபடம்  அமைப்பு  
 இந்நகரில் இஸ்லாமியர்கள் குடியேற்றமானது 7 வது நூற்றாண்டிலிருந்தே
துவங்கிவிட்டது. முஸ்லிம்கள் மூன்று கட்டங்களாக இந்நகரில் குடியேறி
யுள்ளனர்.

முதலாவது குடியேற்றம்

இஸ்லாத்தின் முதல் கலிபா ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் காலத்தில் கி.பி. 633-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில்
இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்துசேர்ந்தது.
அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டணம் வந்து குடியேறி கடற்கரை
யோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். இந்த கடற்கரை பள்ளிதான் இந்தியா
வின் இரண்டாவது பள்ளியும், தமிழ்நாட்டின் முதல்பள்ளியுமாகும்.
(தற்போது இப்பள்ளி கோசுமறை பகுதி அருகே புதையுண்டுள்ளது).
அப்பள்ளியின் அருகிலேயே இக்குழுவினர் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.

இரண்டாவது குடியேற்றம்:

கி.பி;. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா 'அல்வாதிக்' ஆட்சி
காலத்தில் இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூபக்கர் அவர்கள் வம்சா
வழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் ஒரு
குழுவினர் எகிப்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான முஃதஜிலா கொள்
கையை ஏற்க மறுத்து ஈமானை (இறைநம்பிக்கையை) காத்திட
ஹிஜ்ரத் எனும் நாடுதுறப்பு செய்து  கடல் மார்க்கமாக ஜயவீர ராஜ
காரு வேந்தர் காலத்தில் காயல்பட்டணம் வந்து சேர்ந்தனர். இவர்கள்
இந்நகரில் கி.பி. 843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.
பெரிய குத்பா  பள்ளி  

மூன்றாவது குடியேற்றம்:

முஹம்மது நபி அவர்கள் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன்
அவர்கள் தலைமையில் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன்
ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737) ல் காயலில் வந்து குடியேறினார்.
இச் சமயத்தில் எகிப்தை முகம்மதிப்னு கலாவூன் ஆட்சி செய்திருந்தார்.
இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டி
னர். சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் பரம்பரையினர் பிரபுக்கள் என்று
அழைக்கப்படுகின்றனர்.(இன்னும் பிரபுக்கள் குடும்பத்தினர் இந்நகரில் வசித்துவருகின்றனர்)

மன்னர் அவர்கள், அரபி முஸ்லிம்கள்பால் மிகவும் அன்புடையவராக
இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன்
நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தார். செய்யிது ஜமாலுத்தீன் அவர்
களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக
நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும்,
பின் அவரது பேரன் நிஜாமுத்தீனுக்கும் அப்பதவிகள் கிடைத்தது. சுந்தர
பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த
சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச்
சமயத்தில் காயல்பட்டணம் அவரின் தலைநகரமாக விளங்கியது. அவர்
கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார்.

ஆதாரங்கள்:-

 1) An extract from The Travels of Marco Polo, Volume 2, by Marco Polo and Rustichello
of Pisa, et al, Edited by Henry Yule and Henri Cordier. (Marco Polo was a Venetian explorer
(now Italy) who lived between 1254 and 1324)
2) Translation of TAZJIYATU-L AMS�R WA TAJRIYATU-L �S�R - written by Abdullah
Wassaf - reportedly around 1300 AD. Extracts are taken from the book The History of
India, as Told by Its Own Historians: The Muhammadan Period written by Henry Miers
Elliot, John Dowson.
3) Translation of J�MI'U-T TAW�R�KH - written by Rashiduddin - reportedly around 
1310 AD. Extracts are taken from the book The History of India, as Told by Its Own
Historians: The Muhammadan Period written by Henry Miers Elliot, John Dowson.
4) Discovery of india by Pandit Jawaharlal Nehru.
5) History of Tinnevelly by Bishop Caldwell.

இந்நகரம் பழமை பழமை வாய்ந்ததற்கு எடுத்துகாட்டாக இன்னும் இங்கு
பல பழமையான பள்ளிவாசல்கள் உள்ளன. (விரைவில் காயல்படன
பள்ளிகளின் நிழல் படங்களை இங்கு காணலாம்). இன்னும் இந்நகரின் சில அமைப்புக்கள் எகிப்து கலாச்சாரத்தை ஒட்டியதாக உள்ளது. இப்பழம்
பெரும் நகரில் உள்ள பல சுவாரிஸ்யமான செய்திகளை அடுத்தடுத்த
பதிப்புகளில் காணலாம்.

இணைப்புச்செய்தி:-  

காயபட்டனம் என்ற பெயர் இவ்வூருக்கு வர இரண்டு காரணங்கள்
சொல்லப்படுகிறது. ஒன்று இவ்வூரின் அருகில் ஆறு (தாமிரபரணி)
கடலில் கலப்பதால் காயல் என்றும், கடல்சார்ந்த ஊர் என்பதால்
பட்டணம் என்றும், "காயல்பட்டணம்".ஆனதாக ஒரு செய்தியும்.

எகிப்தின் கெய்ரோ (அரபியில் காஹிரா) என்னும் இடத்திலிருந்து இவ்
வூருக்கு வந்து குடியேறிய மக்கள் இவ்வூரை அரபியில் "காஹிர்பதன்"
 என்று (பதன் என்றால் அரபியில் பட்டணம்)அழைத்துவந்ததாகவும் 
அதுவே காலஓட்டத்தில் மருவி "காயல்பட்டணம்" ஆனதாகவும் இன்
னொரு செய்தியும் இங்கு சொல்லப்படுகின்றது. (இப்னு பதுதாவின்
குறிப்பில்)     








Wednesday, 15 September 2010

கத்தார் டூ காயல்

ஸ்ஸ்ஸ்யப்பா............ ஒரு வழியாக ஊருக்கு வந்துவிட்டேன்.
ஜூன் மாசமே ஊருக்கு வரவேண்டியது.ஊருக்கு கிளம்புவதற்காக எல்லா
பொருள்களும் கட்டி தயார் பண்ணியாச்சி, விமானபயண சீட்டெல்லாம் 
கூட வந்திடிச்சி, ஊருக்குபோக மூன்றே நாள்கள்  இருக்கும் தருவாயில். 
திடீர்னு  மேனேஜர் வந்து "இன்னும் ஒரு மாதம் நான் விடுமுறையை
செல்லும் நாளை நீடிப்பு செய்துவிட்டதாக சொல்லிவிட்டார்.அப்புறம்
என்ன? சரி ஒரு மாசம் தானே என்று பழையபடி என்னுடைய மனசை தேற்றிக்கொண்டு பணிசெய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனா  ஊருல
இருந்து தங்ஸ் டெரர்ராகி போனில் என்னிடம் கன்னாபின்னான்னு 
திட்டிரிட்சி! (நல்லவேலை திட்டினது என்னையில்ல என் மேனஜரை!!).
மீண்டும் ஒரு மாசம் கழித்து விட்ட பின்னர் நான் ஊருக்கு கிளம்பும்
நேரத்துல பார்த்து என் டிபார்ட்மென்ட்  "தலை" ஊருக்கு அவசர வேலையா
போயிட்டதுனாலே திரும்பவும் ஒரு மாசம் இருக்க வேண்டியதா
போயிடுச்சி. இதுல காண்டாகி போன தங்ஸ் இதுக்கு  மேலே நீங்க ஊருக்கு
வர்றேன் போர்றேன்னு  சொல்லிக்கிட்டு போன் பண்ணா....இருக்குது உங்களுக்கு! என்று மிரட்டிடிச்சி. எப்போ நீங்க விமானநிலையத்திற்கு போயி போடிங்பாஸ் போட்டுட்டு போன் பண்ணுறீங்களோ அப்பத்தான் 
நீங்க ஊருக்கு வருவதா நம்புவேன்னு கடுப்பா சொல்லிடிச்சி. இப்படி ஒரு வழியா தட்டுதடுமாறி ஊருக்கு வந்து சேந்துட்டேன் (அப்போ இது
சரித்திரம் தானே.....அதான் எழுதுறேன்).

விமானநிலையம்
 ஊருக்கு  வருவது தாமதம் ஆனதாலே குழந்தையுக்கு வாங்கிய உடை
களையும், நோன்பிற்கு வேண்டிய திண்பண்ட வகைராக்களையும்
கார்கோவில் அனுப்பினேன்.அவ்வளவு சுறுசுறுப்பான கார்கோ(?) நான் 
ஊருக்கு வந்த பின்புதான் வந்து சேர்ந்தது. (இதுக்கு நான் கையிலேயே
கொண்டு வந்திருப்பேன்).

உள்குத்து.......
இந்த கார்கோ சேவை தமிழ் நாட்டுகாரர்களிடம் இருக்கும் வரை  இது
மாதிரியான பிரச்சனைகள் கிடையாது.ஆனால் இன்று நம்ம சேட்டன்
மார்கள் கார்கோ தொழிலை  அபேஸ் பண்ணிய பிறகுதான் இப்பிரச்சனை
களெல்லாம்.

இந்த முறை ஈத் பெருநாள் உலக முழுவதும்(எனக்கு தெரிந்தவரை) ஒரே
நாளில் வந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக எனக்கு, ஏன்னா  
நான் உலகத்தில் எங்கு முதல் பிறை தென்பட்டாலும் (ஆதாரபூர்வமான    
தகவல் கிடைக்கும் தருவாயில்) பெருநாள் கொண்டாடும் கொள்கையை
சரி என கண்டு செயல்படுத்துபவன். ஆனால் என் வீட்டில் தங்ஸ் மற்றும்
அம்மாவும் வட்டாரத்தில் பிறைகானப்பட்டால் தான் (தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் கொள்கை ) பெருநாள் கொண்டாடுவார்கள். இந்தமுறை எல்லோ
ருக்கும் ஒரே நாளில் வந்ததால் எனக்கு பெருநாள் உணவு கிடைத்தது.
கடந்தவருடம் நான் ஒருநாள் முன்னால் பெருநாள் கொண்டாடினேன் 
அந்த நாள்  வீட்டில் தங்ஸ் மற்றும் அம்மாவும் நோன்பு வைத்திருந்த
தால் எனக்காக ஒன்றும் சமைக்கவில்லை. நான் அங்கு இங்கு அல்லாடி
கடைசியாக என்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று சாப்பிட வேண்டியதா
போயிடுச்சி ( நல்லவேலையா அவர்கள் என்னுடைய கொள்கையில்
உள்ளவர்களாக இருந்தார்கள்).

 பெருநாள் தொழுகை (காயல்பட்டனம் கடற்கரை) 
பெருநாள் சொற்பொழிவு (காயல்பட்டனம் கடற்கரை ) 
இந்தமுறை பெருநாளில் தங்ஸ்உடைய  டிபார்ட்மென்டிளிருந்து ஒரு சிறிய ரோலை செய்யலாமென்று துணிந்து இறங்கினேன் (அதாங்க
சமையல்). சகோதரி பாயிஷா காதருக்கு என் மனமார்ந்த நன்றிகளை
சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் என் இனிய இல்லத்தில் சகோதரி 
கொடுத்திருந்த சமையல் குறிப்பான அஹனிகறியை செய்து  தங்ஸ்இடம்
பாராட்டு பெற்றேன்.   
காயல்பட்டனம் கடற்கரை(பெருநாள் மாலை காட்சி)
              
இந்தமுறை பெருநாள் எல்லோருக்கும் சேர்ந்துவந்ததால் எங்கள் ஊர்
கடற்கரையில்  பெருநாள்தொழுகை கூட்டம் மிக சிறப்பாக இருந்தது.
பெருநாள் மாலையும் கடற்கரை கலைகட்டியது (காயல்படன  கடற்
கரையை பற்றி தனி பதிப்பு விரைவில் எதிர்பாருங்கள்).
     
ஊருக்கு வந்ததிலிருந்து சரியாக பதிப்புகள் போடுவதில்லை என்றும்,
ஈத் வாழ்த்து கூட போடவில்லை என்று திரு.ஹரி அவர்கள்
கமான்ட்சில்   கலாய்திருக்கிறார். தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும்,
கொஞ்சம் பிஸி..(வேலையே இல்லாதவனுக்கு  நேரம் இல்லையாம்)
இனி இதுபோல் பதிவு போட  நேரம்கடத்தமாட்டேன்.பெருநாள் வாழ்த்து
தானங்கே சொல்லணும்........இதோ சொல்லிடுறேன்.
பெருநாள் வாழ்த்துக்கள்
 கடைக்கு  வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் என் இதயம்
கனிந்த "காலம் கடந்த" பெருநாள் வாழ்த்துக்கள்.
(இவ்வளவு காலதாமதமான வாழ்த்து சொன்ன ஒரே ஆளு நான்தான்னு
நினைக்கிறேன்).

Friday, 3 September 2010

டம்ளரை கீழே வைத்துவிட்டீர்களா?

இதற்கு முந்தியபதிப்பில்  நான் குறிப்பிட்ட இரண்டுவகையினரில்
முதலாவது வகையினர், இவர்கள் தங்களிடம்முள்ள கவலையால் சரியாக
எதையும் செய்யாது எப்பவுமே சோகமான முகத்துடனோ,கன்னத்தில் கைவைத்துக்கொண்டோ  இருப்பவர்களுக்காக இந்த சிறிய கதை .

இந்த கதை ஒரு நண்பர் அனுப்பிய மின்அஞ்சலின் தமிழாக்கம்.
இந்த சிறிய கதை,உங்களுக்கு மிக பெரிய நம்பிக்கையை  கொடுக்கலாம்.

ஒரு ஆசிரியர் தனது  வகுப்பறைக்கு ஒரு டம்ளர் தண்ணீருடன்
வருகிறார். அவர் அந்த வகுப்பு மாணவர்களிடம் அந்த டம்ளரை
காட்டி இது என்ன எடை இருக்கும் என்று கேட்கிறார்.

அதற்கு அந்த மாணவர்கள் 50 gms.....,100 gms.....,150 gms....,என்றும்
பல பதில்களை சொல்கிறார்கள்.

பிறகு அந்த ஆசிரியர் சொல்கிறார் எனக்கும் இதன் எடை தெரியாது
அதை நான் தூக்கும் வரை ஆனால் என் கேள்வி இதுவல்ல 
நான் இதை சில நிமிடங்கள் இப்படியே கையில் வைத்துக்கொண்டு
இருந்தால் என்னவாகும் என்கிறார்.

அதற்கு அங்குள்ள மாணவர்கள் ஒன்றும் ஆகாது என்கிறார்கள்.

அப்படி என்றால் இதை ஒரு மணிநேரத்திற்கு மேல் கையில்
வைத்துக்கொண்டு இருந்தால்...என்று ஆசிரியர் கேட்கிறார்.

அதற்கு அம்மாணவர்கள் உங்கள் கைவலிக்ககூடும்  என்கின்றனர்.

சரி இப்பொழுது நான் இதை நாள்  முழுவதும் இப்படியே வைத்துக்கொண்டு
இருந்தால் என்னவாகும் என்று ஆசிரியர் கேட்க.

அதற்கு ஒரு மாணவர் உங்கள் தோள்பட்டை வலி எடுக்ககூடும்,
உங்களுடைய கை தசை இறுக்கம் ஏற்படலாம்,பிறகு கையை முடக்கி
(பெரல்ய்சிஸ்)கூடவிடலாம்.அதனால் உடனே உங்களை
மருத்துவமனையில் சேர்க்க நேரும் என்று கூறுகின்றான்.

அதற்கு மற்ற மாணவர்கள் சிரிக்கின்றார்கள்.

ஆனால் ஆசிரியர் அந்த மாணவனை பார்த்து மிக சரியாக கூறினாய்
என்கிறார்.மீண்டும் அந்த ஆசிரியர் கேட்கிறார் இத்தனையும் நான் செய்த
பின்பு இந்த டம்ளர் தண்ணீரின்  எடையில் ஏதும் மாற்றம் ஏற்படுமா?

அதற்கு யாரும் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அப்புறம் ஏன் இந்த கைவலியும்,தசை இறுக்கத்தையும் தாங்கிக்கொண்டு 
இதை நான் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கேட்கிறார்.

அதற்கு மாணவர்கள் ஏதும் புரியாதவர்களாக குழப்பமடைகிறார்கள்.

இந்த வலிகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும் என்று ஆசிரியர் கேட்கிறார்.

டம்ளரை நீங்கள் கீழே வைத்துவிடவேண்டும் என்று ஒரு மாணவன்
சொல்கிறான்.

மிகச்சரியாக சொன்னாய் என்று ஆசிரியர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகிறார் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் இதை
போல்தான்.அதை சில நிமிடங்கள் தலையில்வைத்துவிட்டு
கீழேவைத்துவிட்டால் அவை சரியாக இருக்கும்.அதையே அதிகமான
நேரங்கள் வைத்து யோசித்து கொண்டும்,கவலைப்பட்டுக்கொண்டும்
இருந்தால் அதுவே நமக்கு வலியாகமாறும்.இன்னும் தொடர்ச்சியாக
வாழ்க்கை முழுவதும்  அதனை பிடித்துகொண்டுருந்தால் அது அவனுக்கு
பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிடும்.அவனை அது முடக்கிவிடும். அவனால் வேறெதுவும் செய்யமுடியாது.

அவை எவ்வளவு  முக்கியமான பிரச்சனையாக  இருந்தாலும் சரியே!!
அவை எவ்வளவு சவாலான பிரச்சனையானாலும் சரியே!!நாம்
செய்யவேண்டியது அந்த நாளின் இறுதியில் தூங்குவதற்கு முன்னால்
நம்முடைய டம்ளரை (கவலைகளை)கீழே வைத்துவிட வேண்டும்.
இப்படி நீங்கள் செய்தால்   ஒவ்வொரு நாளும் நீங்கள் படுக்கையில்
இருந்து எழும்போது புத்துணர்வுடனும்,ஆரோக்யத்துடனும் எழுவீர்கள்.
எவ்வளவு பெரிய சவாலையும் எளிதாக எதிர்கொள்வீர்கள்.

"அதனால் இன்று முதல் உங்கள் அலுவலத்தைவிட்டு வெளியேறும் 
பொழுது உங்கள் டம்ளரை கீழேவைக்கமறந்து விடாதீர்."





Related Posts with Thumbnails